மூடுக

மாவட்டம் பற்றி

தோற்றம்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் வட்டம் 1910 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. கரூர் மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண்.683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள்.25.07.1996 இன்படி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே நாமக்கல், தெற்கே திண்டுக்கல், கிழக்கே திருச்சிராப்பள்ளி, மேற்கே ஈரோடு ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

நிர்வாக அலகுகள்

கரூர் மாவட்டம், கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இரு கோட்டங்களையும், கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் ஆகிய ஏழு வட்டங்களையும், 203 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகமலை ஆகிய எட்டு வட்டாரங்களையும், 157 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் கரூர், குளித்தலை ஆகிய இரு நகராட்சிகளும், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோலபுரம், பள்ளப்பட்டி, புலியூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, புன்சை புகளூர், டி.என்.பி.எல் புகளூர், உப்பிடமங்கலம் ஆகிய பதினொன்று பேரூராட்சிகளும் உள்ளன.

அமைவிடம்

கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ தெற்கிலும், 2904 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் அமராவதி மற்றும் காவேரி ஆகிய ஆறுகளை இயற்கை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கனிமங்கள் மற்றும் சுரங்கம்

கரூர், கனிம வளம் நிறைந்த மாவட்டம். கிராணைட் கற்கள் தோகமலை, கே.பிச்சம்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. மேற்கூறிய முக்கிய கனிமம் தவிர, செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.

வழிபாட்டுத்தலங்கள்

கரூர் நகரில் சிவாலயங்களின் 7 புனித ஸ்தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தாந்தோண்றி மலையில் தெற்கு திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ராமன சுவாமி திருக்கோவில் மற்றும் வெண்ணமலை பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில், கரூர் நகரின் மையப்பகுதியில் ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது. காவேரி கரையோரத்தில் வேலாயுதம்பாளையத்தில் சிறு குன்றின் மீது பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் நெரூர் சதாசிவம் திருக்கோயிலும் பிரசித்தமான கோவிலாகும்.

தொழில்கள்

கரூர் நகரம் உயர் தர கைத்தறி தொழிலுக்கு புகழ் பெற்றுள்ளது மற்றும் பேருந்து கட்டுமானத் தொழில், ஆடை உற்பத்தி, கொசு வலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதிலுலும் முதல் இடம் வகிக்கிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய தொழிற்சாலைகள் பற்றிய விவரங்கள்:

  • தமிழ்நாடு செய்தி மற்றும் காகித உற்பத்தி நிறுவனம் புகளூரில் அமைந்துள்ளது.
  • மேலும் தமிழ்நாடு செய்தி மற்றும் காகித உற்பத்தி நிறுவனம் காகிதப்புரத்தில் சிமெண்ட் உற்பதியகத்தையும் நிறுவியுள்ளது.
  • செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை புலியூரில் அமைந்துள்ளது.
  • சேரன் சிமெண்ட் கரூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.